அண்ணாநகர்: கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். சென்னை கோயம்பேடு காய்கறி, பூக்கள், பழம் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்துவருவதால் நடக்கக்கூட வழியின்றி தவித்தனர். இதுசம்பந்தமாக அடிக்கடி அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில், அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். பின்னர் அவர், ‘’பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், ஆக்கிரமிப்பு கடைகளை அங்காடி நிர்வாக ஊழியர்கள் அகற்றியதுடன் அபராதம் விதித்து வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுவித்தனர். இதன்பிறகு மக்கள் எளிதாக சென்றுவந்தனர்.
இந்தநிலையில், கோயம்பேடு பழம் மார்க்கெட்டில் பொதுமக்கள் நடந்துச்செல்லும் பாதையை ஆக்கிரமித்து மீண்டும் வியாபாரம் செய்து வந்தனர். இதையடுத்து நேற்று பழ மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்து பொதுமக்கள் நடந்துச்செல்லும் பாதை ஆக்கிரமிப்பை அகற்றியதுடன் கடைகளுக்கு 30ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ‘’அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி மீண்டும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுப்படும்’’ என்று அங்காடி நிர்வாகம் எச்சரித்துள்ளது.