சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கம் கிராமத்தில் உள்ள குளத்தின் ஆக்கிரமைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு குன்றத்தூர் தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மலையம்பாக்கம் கிராமத்தில் சுமார் 47 ஹெக்டேர் பரப்பளவில் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்து பலர் வீடுகளை கட்டியுள்ளனர். இதனால், நிலத்தடி நீராதாரம் எங்கள் பகுதியில் பெருமளவில் குறைந்துவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி காஞ்சிபுரம் கலெக்டர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த மாதம் 9ம் தேதி மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பொன்பாலாஜி ஆஜராகி, ‘குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்கள். அதனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்’ என்றார். அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, தாசில்தார் மூலம் சர்வே செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், குன்றத்தூர் தாசில்தார் மற்றும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் குளத்தை அளவீடு செய்ய வேண்டும். குளம் ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தால் அவற்றை அகற்றுவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணியை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.