சிறப்பு செய்தி
ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர்நிலைகளின் இருப்புகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நீர்வளத்துறை சார்பில் ₹30 கோடியில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
எதிர்கால பயன்பாட்டுக்குத் தேவையான நீரின் அளவு பல்வேறு மாநிலங்களில் வேகமாகக் குறைந்து வருகிறது. இதன் காரணமாக மழைக் காலங்களில் நீர்நிலைகளின் சேமிப்புத் திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தனிநபர் சராசரி நீர் அளவின்படி தண்ணீர் பஞ்சம் மிகவும் அதிகமாகவும், நீர்நிலைகள் மிகவும் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. அதிலும் நீர்நிலைகளின் நீர்பரப்புப் பகுதியில் பெருமளவில் ஆக்கிரமிப்பு நடப்பதால் நீர்க் கொள்ளளவுத் திறன் குறைந்து பாசனப் பரப்பளவைக் குறைத்துவிடுகிறது.
இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் மூலம் புதிய தகவல் தொழில்நுட்ப அமைப்பை பயன்படுத்தி சென்னை மாநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நீரின் தரத்தை கண்காணிக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம், இந்திய தொலை உணர்வு மையம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைத்து தகவல் தொழில்நுட்ப தீர்வாக டிஜிட்டல் தளம் உருவாக்கப்படுகிறது. நீர்நிலை கண்காணிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு கண்டறியும் வகையில் இணையதளம் அடிப்படையிலான புவியியல் தகவல் அமைப்பு மூலம் செயல்படுத்தப்படும் மேலும் பொதுமக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இத்திட்டமானது இம்மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போதுள்ள அனைத்து தரவுகளையும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரித்து ஒரே இணையதளத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். அனைத்து அரசு துறையின் எதிர்க்கால திட்டமிடுதல் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதற்கான துல்லியமான தகவல்கள் வழங்கப்படும். மேலும் நீர் தொடர்பான தகவல்களுக்கான மைய ஆதாரமாக செயல்படும்.
மத்திய நீர்வள ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம், இஸ்ரோ உள்ளிட்ட துறைகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்நேர தரவுகளை வெளியிடும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் உருவாக்கும் திட்டமானது நீர்வளத்துறையின் மூலம் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது இரண்டாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த இணையதளம் பயன்பாட்டிற்கு வரும்போது நீர்நிலை ஆக்கிரமிப்புகள், தண்ணீர் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை அடையாளம் காணப்படும். நீர்நிலைகளை எளிதில் கண்காணிப்பதற்கும் இது உதவும்.
அதேபோல் இந்த நிகழ்நேர இணையதளத்தில் மழைப்பொழிவு, நீர்த்தேக்கங்கள், நீர்ப்பாசன தொட்டிகள், நிலத்தடி நீர், நதி அளவீடுகள், மண்ணின் ஈரப்பதம் மற்றும் ஆவியாதல் ஆகியவற்றை உள்ளடக்கிய 7 ெதாகுதிகள் உள்ளன. மேலும் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து முன்னறிவிப்பு உள்ளிட்ட விரிவான தரவுகளை வழங்கும். நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் ₹30.55 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தளம் மாநிலத்தின் நீர் மேலாண்மை முயற்சிகளின் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
* நீர்த்தேக்க சேமிப்பு மற்றும் நீர்வரத்து உள்ளிட்ட அனைத்து நீர் தொடர்பான தரவுகளை ஆன்லைனில் கிடைக்கும் வகையில் புதிய தளம் உருவாக்கப்படுகிறது.
* நீர்நிலை கண்காணிப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை கண்டறியும் வகையில் நிகழ்நேர இணையத்தளம் அமையும்.
* 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு பீட்டா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
* பொதுமக்கள், நிர்வாகம் என இரண்டு உள் நுழைவுகளை இந்த அமைப்பு கொண்டுள்ளது.
* இம்மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.