Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் தோளூர்பட்டியில் வசிப்பவர் ஞானசேகரன் (60). திருச்சி மாவட்ட மதிமுக துணை செயலாளரான இவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் தளத்தில் தொட்டியம் பாலசமுத்திரத்தை சேர்ந்த முருகானந்தம் (45) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் நேற்றுமுன்தினம் இரவு மூங்கில்துறையை சேர்ந்த சூரியா என்பவர் தன்னை காதலிக்குமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். காதலிக்காவிட்டால் கழுத்தை அறுத்து போட்டு விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த பெண் புகார் கூறியதால் அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர் வந்து சூர்யாவை அடித்து உதைத்துள்ளார். தப்பி ஓடிய சூர்யா, நண்பர்களுடன் பைக்கில் நள்ளிரவு 12 மணியளவில் மளிகை கடைக்கு வந்து, கடைமுன் 3 பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியுள்ளார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. தீப்பிடித்ததில் கடை வாசலில் இருந்த உப்பு மூட்டை, மின் மோட்டார் எரிந்து சேதமானது. கடையின் சுவரின் பூச்சு உடைந்து விழுந்தது. சத்தம் கேட்டு ஞானசேகரன் வந்து தீயை அணைத்தார்.

புகாரின்படி தொட்டியம் போலீசார் நடத்திய விசாரணையில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டது சூர்யா (24), அவரது அண்ணன் ஹரிபிரசாத் (25), நண்பர்கள் சுபாஷ் (28), பெரியதம்பி (30), 17வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் உட்பட 4 பேரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.