பெரம்பூர்: கொளத்தூர் தேவி நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கவுதம்கார்த்திக் (33). கடந்த 2 வருடங்களாக தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இவர், பிரசாந்த் (30) என்பவருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் மாலை ராஜமங்கலம் வடக்கு ஜெகநாதன் நகர் முதல் தெருவில், அறுந்து கிடந்த தொலைதொடர்பு வயரை சரிசெய்து கொண்டிருந்தார்.
அப்போது தொலைதொடர்பு வயரை கட்டுவதற்காக அலுமினிய கம்பியை பயன்படுத்தியபோது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் உரசி, மின்சாரம் பாய்ந்தது. இதில், கவுதம் கார்த்திக் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜமங்கலம் போலீசார், கவுதம் கார்த்திக் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கவுதம் கார்த்திக் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், திருமணமாகாத இவர், சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.