பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலையை சேர்ந்தவர் உத்தம் (28). கொடுங்கையூர் சின்னாண்டி மடம் கே.எம்.கார்டன் பகுதியில் தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாப்பி என்பவர் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பட்டறையில் பாப்பி மட்டும் இருந்துள்ளார். இரவு 8 மணிக்கு உத்தம், தனது பட்டறைக்கு வந்தபோது, பாப்பியை காணவில்லை.
பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, பட்டறையை சோதனை செய்தபோது, அங்கு வைத்திருந்த 500 கிராம் தங்கம் மாயமானது தெரிந்தது. முதற்கட்ட விசாரணையில், நகையுடன் பாப்பி தப்பியோடியது தெரியவந்தது. இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.