பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று அமெரிக்காவை சேர்ந்த உலகின் 9ம் நிலை வீராங்கனை எம்மா நவரோவை, 68ம் நிலை வீராங்கனை ஜெஸிகா மனேரோ அபாரமாக வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 9ம் நிலை வீராங்கனை எம்மா நவரோ (24), ஸ்பெயினை சேர்ந்த உலகின் 68ம் நிலை வீராங்கனை ஜெஸிகா பூஸ் மனேரோ (22) மோதினர்.
அனுபவம் வாய்ந்த எம்மா நவரோவை திணறடித்து ஆடிய ஜெஸிகா, முதல் செட்டில் ஒரு புள்ளி கூட விட்டுத் தராமல் 6-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டையும், 6-1 என்ற புள்ளிக்கணக்கில் அவர் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ஜெஸிகா 2வது சுற்றுக்கு முன்னேறினார். எம்மா நவரோ அதிர்ச்சித் தோல்வி அடைந்து, போட்டியில் இருந்து வெளியேறினார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் கஜகஸ்தானை சேர்ந்த உலகின் 11ம் நிலை வீராங்கனை எலனா ரைபாகினா, அர்ஜென்டினாவின் ஜூலியா ரியரா உடன் மோதினார். முதல் இரு செட்களில், இருவரும் தலா ஒன்றை கைப்பற்றினர். இறுதியில் 3வது செட்டை ரைபாகினா வசப்படுத்தினார். அதனால், 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
* ஆடவர் பிரிவில் அசத்திய அமெரிக்க வீரர் ஷெல்டன்
ஆடவர் பிரிவில் நடந்த ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீரர் பெஞ்சமின் டாட் ஷெல்டன், இத்தாலி வீரர் லொரென்ஸோ ஸொனேகோ மோதினர். முதல் 4 செட்களில் இருவரும் மாறி மாறி, தலா 2 செட்களை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 5வது செட்டை ஷெல்டன் கைப்பற்றினார். அதனால், 3-2 என்ற செட் கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் போர்ச்சுகல் வீரர் நுனோ போர்ஜஸ், பிரான்ஸ் வீரர் கைரியன் ஜேக்கட் மோதினர். இப்போட்டியில், 3-6, 6-7 (3-7), 6-4, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற போர்ஜஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.