சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறந்து 2 வாரத்திற்குள் இலவச பயண அட்டையை அரசு போக்குவரத்து கழகத்தினர் கட்டுப்பாட்டில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனம் அச்சடித்து வழங்குகிறது. போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியாக சென்று மாணவர்களின் விவரங்களை சேகரித்து பெறப்பட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் பேருந்து பயண அட்டை தயாரித்து வழங்கும் நடைமுறை இதுவரையில் இருந்து வந்தது.
இதனால் பஸ் பாஸ் வழங்குவதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டன. இதை தவிர்க்க போக்குவரத்து துறை, பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் எமிஸ் இணையதளம் வழியாக மாணவர்களின் பெயர் விவரங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயண அட்டையை வழங்க திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் விவரங்களை அந்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாக பயண அட்டை தேவையா, வேண்டாமா என விருப்பத்தை தெரிவித்தால் போதுமானது.
அதன் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளுக்கு இலவச பயண அட்டையை வழங்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பயணியர் மற்றும் பொருள் போக்குவரத்து கழகம் ஒருங்கிணைந்து இந்த பணியை செய்து வருகிறது. இந்த வருடம் சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.