சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் இன்று (20.05.2025) சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் வந்து, தென்மேற்குப் பருவமழை தயார்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
19.05.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தென்மேற்கு பருவமழை ஆய்த்த நிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை தவறாது பின்பற்றவும் அறிவுரை வழங்கினார்.
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நேற்று பெய்த மழை காரணமாக கே ஆர் பி நீர்த்தேக்கம் மற்றும் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 4,200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் காணொளி காட்சி மூலம் கேட்டு அறிந்தார்கள்.
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் 24 மணி நேரமும் இயங்கி வரும் அவசர அழைப்பு மையத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைக் கேட்டறிந்த அமைச்சர் , புகார்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு. புகார் அளித்தவர்களுக்கு எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆய்வின் போது, எம். சாய் குமார், கூடுதல் தலைமைச் செயலர் /வருவாய் நிருவாக ஆணையர், பெ.அமுதா. அரசு கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சிஜி தாமஸ் வைத்தியன். ஆணையர், பேரிடர் மேலாண்மை. கே. எஸ். பழனிச்சாமி. நில நிர்வாக ஆணையர், டி.என். ஹரிஹரன். நில சீர்திருத்த ஆணையர், ச.நடராஜன். கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையர், மதுசூதனன் ரெட்டி. நில அளவை மற்றும் நிலவரி திட்ட ஆணையர், அ.சங்கர். நில சீர்திருத்த இயக்குனர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.