சண்டிகர்: ‘எமர்ஜென்சி’ படத்திற்கும் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில் பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கங்கனா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி’ திரைப்படம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இப்படம் வரும் செப். 6 அன்று திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு கங்கனாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் பேசுபவர்கள், ‘இந்த படத்தை நீங்கள் ரிலீஸ் செய்தால் சர்தார்கள் உங்களை காலணியால் அடிப்பார்கள்’ என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக கங்கனா தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி சார்பில், ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘சீக்கியர்களின் வாழ்க்கை முறை மற்றும் வரலாற்றை ‘எமர்ஜென்சி’ திரைப்படம் தவறாக சித்தரிக்கிறது. கடந்த ஆக. 14ம் தேதி வெளியான ட்ரெய்லரில் சீக்கியர்களுக்கு எதிரான பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சீக்கிய சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த ட்ரெய்லரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிட்டு, கங்கனா உள்ளிட்டோர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி சார்பில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எமர்ஜென்சி’ படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக் கோரியும், அந்தப் படம் திரையிடப்படுவதை தடை செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வெளியாவதை தடை செய்யுமாறு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சருக்கும், ஒன்றிய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கங்கனா ரனாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி செயலாளர் பர்தாப் சிங் கூறினார்.
ரூ.1.56 கோடியில் மும்பையில் ஆபீஸ்;
பாலிவுட் நடிகை கங்கனா சமீபத்தில் நடந்த மக்களவை ேதர்தலில், இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார். சர்ச்சை கருத்துக்கு பெயர் போன இவர், தற்போது மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரியில் 407 சதுர அடி அலுவலக இடத்தை ரூ.1.56 கோடிக்கு வாங்கியுள்ளார். இதற்கான பத்திரப்பதிவு கடந்த 23ம் தேதி நடந்துள்ளது. மேலும் அவருக்கு சந்திர குப்தா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், இந்த சொத்தை விற்றுள்ளது. ‘ஆர்ச் ஒன்’ என்ற அடுக்குமாடி கட்டிடத்தின் 19வது மாடியில் இந்த சொத்து அமைந்துள்ளது. முத்திரை கட்டணமாக ரூ.9.37 லட்சம் மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.30,000 செலுத்தியதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.