மரகதப் புறா (Common Emerald Dove) பச்சைப்புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்படுகிறது. இப்புறா, வெப்பமண்டலத் தெற்காசியாவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வரையிலும், கிழக்கே இந்தோனேசியா, வடக்கு, கிழக்கு ஆஸ்திரேலியா வரையிலும் பரவலாகக் காணப்படும். இதில் பல இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று இனங்கள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.
மரகதப் புறாக்கள் தனித்தோ, இரட்டையாகவோ, சிறு குழுக்களாகவோ காணப்படுகின்றன.இனச்சேர்க்கை தவிர மற்ற நேரங்களில் இவை பெரும்பாலும் நிலத்திலேயே காணப்படுகின்றன. இவை நிலத்தில் விதைகள், பழங்கள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களை உண்ணுகின்றன. மரகதப் புறா இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாகும். இப்பறவை தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் முப்பது சதவீதம் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.