புதுடெல்லி: வரும் 16ம் தேதி முதல் அனைத்து ஆர்டிஐ மனுக்களின் இமெயில் முகவரி ஓடிபி மூலம் சரிபார்க்கப்படும் என ஒன்றிய அரச அறிவித்துள்ளது. அரசு துறைகளில் பல்வேறு தகவல்களை அறிய, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் பொதுமக்கள் www.rtionline.gov.in என்ற இணையதளம் வாயிலாக மனு அனுப்பலாம். இந்த இணையதளத்திலேயே மனுக்களின் நிலையை அறியலாம், மேல்முறையீட்டையும் தாக்கல் செய்யலாம். இந்நிலையில், இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து ஆர்டிஐ மனுக்களின் இமெயில் ஓடிபி மூலம் சரிபார்க்கப்படும் என ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
இது வரும் 16ம் தேதி அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பை மேம்படுத்தவும், இணையதளத்தின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும் ஓடிபி மூலம் இமெயில் சரிபார்ப்பு வருமு் 16ம் தேதி முதல் தொடங்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.