தேன்கனிக்கோட்டை: தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில், யானையை சுட்டுக்கொன்ற வழக்கில், மேலும் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனகோட்டம், ஜவளகிரி, சென்னமாளம் காட்டுப்பகுதியில் கக்கமல்லேஸ்வர சுவாமி கோயில் அருகில், 16 வயது ஆண் யானை காயத்துடன் இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டனர். இதில் சென்னமாளம் கிராமத்தை சேர்ந்த முத்துமல்லேஷ் (34) என்பவர், விவசாய நிலத்தில் ராகி பயிரை அடிக்கடி யானைகள் நாசப்படுத்தி வந்ததால், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் யானை உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 31ம் தேதி முத்துமல்லேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட கனகபுரா தாலுகா, காடுசிவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சீனிவாசமூர்த்தி(34) என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்த வனத்துறையினர், தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.