*விவசாயிகள் கவலை
தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே, மாந்தோப்புக்குள் புகுந்து மாங்காய்கள் மற்றும் மாமரங்களை, யானைகள் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 5 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி, அருகில் உள்ள கிராம பகுதிகளில் தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வந்தன.
தற்போது, மா சீசன் துவங்கியுள்ளதால், யானைகள் மாந்தோப்புகளை நோக்கி படையெடுக்கின்றன. நேற்று முன்தினம் இரவு, காட்டை விட்டு வெளியேறிய யானைகள், ஏணிமுச்சந்திரம் கிராமத்திற்குள் புகுந்து சிவண்ணா என்பவரது தோட்டத்தில் முன்பக்க இரும்பு கேட்டை உடைத்து வீசி விட்டு, மரக்கிளைகளை உடைத்து மாங்காய்களை சுவைத்து விட்டு சென்றன. நேற்று காலை அந்த பக்கமாக சென்ற விவசாயிகள், யானைகள் அட்டகாசத்தை கண்டு சிவண்ணாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் தனது தோட்டத்திற்கு வந்து பார்த்த போது, கொப்பும் குலையுடன் சேர்த்து மாங்காய்களை யானைகள் சேதப்படுத்தி சென்றிருப்பதை கண்டு கண்ணீர் வடித்தார். வனத்துறையினர் ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக நொகனூர் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானைகள், அறுவடைக்கு தயாராக உள்ள மாந்தோப்புகளில் புகுந்து மாங்காய்களை பறித்து சாப்பிட்டு, மரக்கிளைகளை முறித்து நாசம் செய்கின்றன.
ஏற்கனவே மாங்காய் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யானைகள் தினமும் மாந்தோட்டங்களில் புகுந்து மரங்களை நாசம் செய்வதால் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளோம். எனவே, பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு, வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்றனர்.