ஆம்பூர்: தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதியில் யானையை கொன்று தந்தம் கடத்தியதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தமிழக-ஆந்திர மாநில எல்லையொட்டி சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. ஆந்திர மாநிலம் கவுண்டன்யா வனப்பகுதியொட்டி பேரணாம்பட்டு, ஆம்பூர், சாரங்கல், துருகம், காரப்பட்டு, வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் மட்டுமன்றி வனவிலங்குகளும் அதிகளவில் உள்ளன. குறிப்பாக மான், யானை, சிறுத்தை, மலைபாம்பு, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாக இந்த வனப்பகுதி திகழ்கின்றன. குறிப்பாக தமிழக-ஆந்திர எல்லை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைக்கூட்டம் சுற்றி வருகிறது.
ஆந்திராவின் கவுண்டன்யா காடுகள், பேரணாம்பட்டு வனசரகத்திற்கு உட்பட்ட சாரங்கல் காப்புக்காடுகள், ஆம்பூர் வன சரகத்திற்கு உட்பட்ட மாச்சம்பட்டு, துருகம் காப்புக்காடுகளில் இந்த யானை கூட்டம் சுற்றித்திரிந்து வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் ஆந்திர மாநில வனத்துறையினருக்கு எல்லையோர காட்டு பகுதியில் ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதாகவும், அந்த யானையின் தந்தம் வெட்டி கடத்தப்பட்டு உள்ளதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, நேற்று ஆந்திர வனத்துறையினர் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திர வனப்பகுதியில் யானை சடலம் கிடைக்கவில்லை. எனவே யானை தமிழக எல்லை பகுதியில் இறந்து கிடக்கலாம் என்று கருதினர். உடனே இந்த தகவலை பேரணாம்பட்டு வனச்சரக அலுவலகத்திற்கு தெரிவித்தனர்.
அதன்பேரில், பேரணாம்பட்டு வனச்சரகத்தை சேர்ந்த வன ஊழியர்கள் சாரங்கல் உள்ளிட்ட எல்லையோர வனபகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் யானையின் சடலம் காணப்படவில்லை. இதைத்தொடர்ந்து, ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் ஆம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட துருகம் காப்புக்காடு, பேரணாம்பட்டு வனச்சரகத்தில் சாரங்கல் காப்புக்காட்டை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் இன்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை உண்மையிலேயே கொல்லப்பட்டதா? அந்த யானையின் தந்தத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுவிட்டார்களா? அல்லது வனத்துறையினரை திசைதிருப்ப மர்ம நபர்கள் இவ்வாறு தகவல் கொடுத்தார்களா என்று பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.