நன்றி குங்குமம் ஆன்மிகம்
யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் ஒரு தெய்வீக ரகசியம் உள்ளது. தினமும் மூலிகை மற்றும் தாவரங்களை மட்டும் உண்டு, மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை! மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்திய மிருகங்களிலுள் யானையும் ஒன்று. உலகில் வாழும் உயிரினங்களில், இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக, ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை, யானைக்கு மட்டுமே உண்டு. மனிதர்களாகிய நமக்குகூட தினமும், 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசம், ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில் மாறிக் கொண்டே இருக்கும். சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மிக முயற்சிகளுக்கு `சரகலை’ என்று பெயர்.
`பிராணாயாமம்’, `வாசியோகம்’ போன்றவைகளும், நமது சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றம் அடையவைக்கும், ஆன்மிக பயிற்சி முறைகளாகும்.`வாசியோகம்’ அல்லது `பிராணாயாமத்தில்’ குறிப்பிட்ட நிலையை எட்டியவர்கள், எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள். இதற்கு `சுழுமுனை வாசியோகம்’ என்று பெயர். இயற்கையாகவே `சுழுமுனை வாசியோகம்’ உள்ள யானை, அதன் தும்பிக்கையை நம் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வதால், மகாலட்சுமியின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
தொகுப்பு: பரிமளா