கம்பம்: யானைகள் நடமாட்டம் உள்ளதால், சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். கடந்த சில நாட்களாக சுருளி அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை நீரோடைகளில் அதிக அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் சுருளி அருவிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை முதல் சுருளி அருவியில் 10 காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பதால் பொதுமக்கள் சுருளி அருவியில் குளிக்கவும், நுழையவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதே பகுதியில் கடந்த மாதம் 10 காட்டு யானைகள் பத்து நாட்கள் முகாமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.