*சிசிடிவி காட்சி வைரல்
கோவை : கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. அவை இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். இதனிடையே கடந்த சில நாட்களாக கெம்பனூர், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை பொம்மனம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்தது. அக்கிராமத்திற்குள் இரவு முழுவதும் சுற்றித் திரிந்த அந்த யானை, நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ரவி என்பவர் தோட்டத்திற்குள் சென்றது.
அங்கு சிறிது நேரம் இருந்த அந்த யானை, உணவு தேடி சுற்றித் திரிந்தது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.தொடர்ச்சியாக, காட்டு யானைகள் கிராமப்பகுதிக்குள் நுழைந்து விளை பயிர்களை மட்டுமின்றி, ரேஷன் அரிசி, கால்நடை தீவனங்கள் உள்ளிட்டவற்றையும் சாப்பிட்டு வருவதாகவும், காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதேபோல கடந்த 3ம் தேதி இரவு வெள்ளியங்கிரி கோயிலுக்கு செல்லும் சாலையில் உள்ள தண்ணீர்பந்தல் என்ற பகுதிக்குள் ஒற்றை ஆண் காட்டு யானை நுழைந்தது. அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் நுழைய முயன்ற யானையை, இரண்டு வாகனங்களில் வந்த வனத்துறையினர் விரட்ட முயன்றனர்.
அப்போது வனப்பகுதியை நோக்கி சென்ற காட்டு யானை திடீரென ஆக்ரோசமாக வந்து வனத்துறை ஜீப்பை முட்டித்தள்ள முயன்றது. இதையடுத்து வனத்துறையினர் ஒலி எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.