சென்னை: மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விரைவாக வழங்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 15,94,321 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பலர் குடும்ப அட்டைகளை இழந்தனர். 4 மாவட்டங்களில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு 2023 டிசம்பரில் 17,197 குடும்ப அட்டைகள் அச்சடித்து வழங்கப்பட்டன.
வெள்ளம் பாதித்த நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் 10,380 குடும்ப அட்டைகள் 2023 டிசம்பரில் வழங்கப்பட்டன. 2024 மார்ச்சில் 45,509 குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. மக்களவை தேர்தல் நடைமுறையால் விண்ணப்பம் சரிபார்ப்பு, ஆய்வுப்பணியை மேற்கொள்ள இயலவில்லை. தேர்தல் முடிந்த பிறகு கள விசாரணை, விண்ணப்ப விவரங்களை சரிபார்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதுவரை 2,89,591 விண்ணப்பங்களில் 1,63,458 புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்கள் கள விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன
கள விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, 92,650 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட 24,657 விண்ணப்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர விண்ணப்பங்களுக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. மீதம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கும் தொடர்ந்து கள விசாரணை, விண்ணப்பம் சரிபார்க்கும் பணி விரைந்து நடந்து வருகிறது என்றும் கூறினார்.