திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் நேற்று காலை நிலவரப்படி திருச்சி முக்கொம்புக்கு 1,68,900 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இங்கிருந்து காவிரியில் 43,317 கன அடி, கொள்ளிடத்தில் 1,24,753 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் சாய்ந்த நிலையில் இருந்த ஸ்ரீரங்கம்-நெ.1 டோல்கேட் பகுதியை இணைக்கும் கொள்ளிடம் ஆற்றில் நேப்பியர் பாலம் வடிவில் புதிய பாலம் அருகே ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 உயர் மின்னழுத்த ராட்சத கோபுரங்கள் அடித்து செல்லப்பட்டது. அப்போது, மின்கோபுரங்களை அகற்றும் பணியில் இருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சாதிக் குல் இஸ்லாம் (25) என்ற ஒப்பந்த ஊழியர் ரோப் அறுந்து தத்தளித்தார். இதையடுத்து அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் அவரை கயிறு கட்டி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.