சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் இருமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும், தயாரிப்பாளர்கள், உரிமையாளர்கள் என அனைவருக்கும் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் தற்போது மின்சார மீட்டருக்கு மாத வாடகை வசூலிக்க தமிழக மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவு பொதுமக்களையும், வணிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது ஒருமுனை (சிங்கிள் பேஸ்) போர்டுகளுக்கு ரூ.300ம் மும்முனை இணைப்புக்கு ரூ.720ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதையும் அதிகமாக்க மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே நிதிச்சுமையில் உள்ள வணிகர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதோடு, வணிகத்தை விட்டு வெளியேறும் நிலைமை உருவாகிவிடக்கூடாது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, மின்மீட்டர் வாடகை, மின் இணைப்பு சாதனங்களுக்கு கூடுதல் கட்டணம் போன்றவற்றை தவிர்த்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் காத்திடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஜி.எஸ்.டி துறையில் அமலாக்கத்துறை அனுமதிக்ககூடாது என்பதை வலியுறுத்தியும், அதிகபட்ச 28 சதவிகித வரியை குறைக்க வலியுத்தியும் தென்மண்டலம் சார்பாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா கர்நாடகா உள்ளிட்ட வணிக நிர்வாகிகள் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வருகிற செப்டம்பர் 5ம் தேதி அன்று சந்தித்து முறையிட இருக்கிறோம்.