திருவொற்றியூர்: மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தம் சந்திப்பில் பல கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை மழை நீர் வடிகால் இணைப்பிற்காக காங்கிரீட் சுவர்கள் உடைக்கும் பணியில் மணலியைச் சேர்ந்த மணிகண்டன்(31), தென்காசியைச் சேர்ந்த குருசாமி(42) ஆகியோர் ஈடுபட்டனர். ட்ரில்லிங் மிஷினை வைத்து சுவரை உடைக்க முயன்றபோது, தரையில் புதைக்கப்பட்டிருந்த மின் ஒயரில் உரசி இருவரும் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தனர்.
சத்தம் கேட்டு அருகே இருந்த கரும்பு ஜூஸ் கடைக்காரர் குமார் என்பவர் மயங்கி கிடந்த இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு வெளியே கொண்டு வந்தார். பின்னர் சிகிச்சைக்காக இருவரையும் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் மின் ஒயரில் உரசியபடி இருந்த டிரில்லிங் மிஷினில் இருந்து புகையுடன் தீ கிளம்பியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மின்சாரத்தை துண்டித்து ட்ரில்லிங் மிஷினை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.