திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த திருமழிசை, மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன்(32). இவர் திருமழிசையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சரண்யா(29), இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று திருமழிசை சிப்காட் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டதால். மின்வாரிய ஊழியர் மோகன் என்பவருடன் தற்காலிக ஊழியரான நரேந்திரன் சென்றார்.
அப்போது மின்கம்பத்தில் மோகன் ஏறாமல் நரேந்திரனை மின் கம்பத்தில் ஏற்றிவிட்டு பழுதை சரிபார்க்க சொன்னதாக கூறப்படுகிறது. அப்போது பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் நரேந்திரன் உடலில் மின்சாரம் பாய்ந்து கம்பத்தின் மேல் இருந்து தூக்கி வீசப்பட்டு ரத்த காயங்களுடன் மயங்கினார். உடனடியாக நரேந்திரனை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நரேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் பூந்தமல்லி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மின் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் நரேந்திரன் இறந்து போனதாக குற்றம் சாட்டினார்கள்.
இதையடுத்து நரேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றபோது உறவினர்கள் ஆவேசத்தில் வாகனத்தின் கண்ணாடியை அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பூந்தமல்லி போலீசார் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினார்கள். இதனால் மருத்துவமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.