இந்தியாவில் தொழில் வளர்ச்சியும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும் பெரும்பாலும் சிறு, குறு தொழில்களை சார்ந்தே உள்ளன. சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஏராளம். இத்தொழில்கள் சார்ந்த புத்தாக்க திட்டத்திற்கு தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 6 தொழிற்பேட்டைகள் உள்ள நிலையில், மேலும் 6 தொழில் பேட்டைகளை உருவாக்கிட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் அதற்கான மின் கட்டணங்களும் முக்கிய பங்காற்றுகின்றன.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உச்ச நேர மின்பயன்பாட்டை 8 மணி நேரமாக உயரத்தியதை ரத்து செய்யவேண்டும். உயர்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு இக்கோரிக்கைகள் சென்றவுடன், தொழில் வளர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டும் அவர், தொழில் நிறுவனங்களுக்கு உரிய மின் சலுகைகளை வழங்கிட உத்தரவிட்டார். அதன்பேரில் அமைச்சர்கள் அன்பரசன், ராஜா ஆகியோர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் தொழில் துறையினருக்கு பல்வேறு சலுகைகள் இப்போது கிட்டியுள்ளன.
அரிசி ஆலைகள், பட்டாசு ஆலை, செங்கல் சூளை உள்ளிட்ட தாழ்வழுத்த பிரிவில் இடம் பெறும் தொழில் நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட மின் பளுவை இனிமேல் ஆண்டுக்கு 4 முறை மாற்றி அமைத்து கொள்ளலாம். அதாவது மின் பளுவை, தங்கள் தேவைக்கேற்ப உயர்த்திக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான ஒரு யூனிட் மின் கட்டணம் ரூ.7.65லிருந்து, 4.60 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 12 கிலோ வாட்டிற்கு குறைவாக செயல்படக் கூடிய தொழில் நிறுவனங்கள் 3பி கட்டண விகிதத்தில் இருந்து ‘3ஏ1’ கட்டண விகிதத்திற்கு மாற்றிக் கொள்ள மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தொழில்துறையினர் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்திலும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அரசு இத்தகைய சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.
மேலும் தொழிற்சாலைகளுக்கான நிலைக்கட்டணத்தை குறைக்கும்போது தொழில் முனைவோருக்கு சிரமங்கள் குறையும். அந்த வகையில் 3 ஏ1 பிரிவில் 500 யூனிட் வரை ஒரு யூனிட் மின் கட்டணம் ரூ.4.60ஆகும். அதற்கு மேல் யூனிட்டிற்கு கட்டணம் ரூ.6.65 ஆகும். நிலைக்கட்டணம் கிலோ வாட்டிற்கு ரூ.72 மட்டுமே நிர்ணயம் செய்யப்படுவதால், தொழில் நிறுவனங்கள் சீரான தொழில் உற்பத்தியை மேற்கொள்ளலாம். தொழிற்சாலைகள் கோரிக்கை விடுத்தவுடன், அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்த அரசுக்கு தொழில் நிறுவனத்தினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.