சென்னை: மின்சார சிக்கன நடவடிக்கைக்காக எல்இடி பல்ப் பொருத்தும் திட்டத்திற்காக மின் வாரியத்துக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடியை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுள்ளது. இந்த நிதியை மீண்டும் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக குறைந்த மின்சாரத்தில் இயங்கும் எல்இ.டி, பல்ப், டியூப் லைட் உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்துமாறு ஒன்றிய மின்சார துறை மக்களை அறிவுறுத்தி வருகிறது.
மேலும் இந்த பணிகளை மருத்துவமனை போன்றவற்றில் மேற்கொள்ளும் மாநில அரசுகளுக்கு நிதி உதவியும் அளித்து வருகிறது. அரியலுார், தருமபுரி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் 159 ஆரம்ப சுகாதார நிலையங்கள், கன்னியாகுமரி, தருமபுரி, சிவகங்கை மாவட்டங்களில் 103 அரசு பள்ளிகளில், 9 வாட்ஸ் திறனில், 740 எல்இடி பல்ப், 20 வாட்ஸ் திறனில், 7,500 எல்இடி டியூப் லைட், 5,200 மின் விசிறி ஆகியவற்றை பொருத்த இந்தாண்டு தொடக்கத்தில் மின் வாரியம் முடிவு செய்தது.
இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: குறைந்த மின்சாரத்தில் இயங்கும் மின் சாதனங்களை பொருத்தும் பணிக்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது, இதில் 2 நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால், அந்த நிறுவங்கள் உரிய தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால் பணிகள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக திட்டமிட்டபடி மார்ச் மாதத்திற்குள் பணிகள் தொடங்கப்படவில்லை. இதையடுத்து, இத்திட்ட பணிகளுக்காக வழங்கப்பட்ட ரூ.4 கோடியை ஒன்றிய மின் துறையின் மின் சிக்கன நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது. விரைவில் மீண்டும் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, ஒன்றிய அரசிடம் இருந்து மீண்டும் நிதியுதவியை பெற்று இதற்கான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.