சென்னை: மின்வாரியத்திற்கு தேவையான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததில் பல நூறு கோடி வரிஏய்ப்பு செய்ததாக, தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் 2வது நாளாக நேற்றும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் போலி நிறுவனங்கள் தொடங்கி, அதன் மூலம் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை, எண்ணூர் ஆகிய 4 அனல் மின் நிலையங்களுக்கு தேவையான இயந்திரங்கள், உதிரிபாகங்கள், நிலக்கரி கையாளும் வகையில் கன்வேயர் பெல்ட் ஆகியவை, ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக செய்து வருகிறது. இதற்காக இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது.
அப்படி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு முறையாக கணக்கு காட்டாமல் போலி ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து ராதா இன்ஜினியரிங் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், தமிழக அரசு ஒப்பந்தம் பெற உதவியாக இருந்த முன்னாள் மின்வாரிய அதிகாரி காசி வீடு, 4 அனல் மின்நிலையங்கள் என தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் நடத்தி வருகின்றது.
ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் உரிமையாளர் வீடு, சிறுசேரி சிப்காட் மென்பொருள் பூங்காவில் உள்ள தலைமை அலுவலகம், படூர் பசிபிகா ஆரம் அடுக்குமாடி குடியிப்பை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அம்பலவாணன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்கள், மற்றும் துணை நிறுவனங்களான தி.நகர் சங்கார தெருவில் உள்ள பண்டாரி என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், வேப்பேரியில் உள்ள வி.எஸ்.எண்டர்பிரைசஸ் நிறுவனம், எழுகிணறு பகுதியில் உள்ள ஆதிநாத் ஸ்டீல் நிறுவனம், கிண்டி ஆலந்தூரில் உள்ள அபி ஜெனிக்ஸ் பயோ சொல்யூஷன்ஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஹிரணந்தனி பிரிட்ஸ் உட் நிறுவனம், ஒரகடம் பகுதியில் உள்ள இன்டஸ்ட்ரியல் காரிடார் நிறுவனம், இன்டர்லேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களிலும் இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நடந்தது.
நள்ளிரவு வரை நீடித்த சோதனையில் கைப்பற்றப்பட்ட அவணங்களை வைத்து உரிமையாளர்கள் மற்றும் அதன் நிர்வாகிகளிடம் அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தினர். மேலும், வெளிநாடுகளில் பொருட்கள் இறக்குமதி செய்த போது இரண்டு விதமான கணக்குகள் பராமரித்து அதை வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்ததற்கான ஆவணங்கள். வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததற்கான ஆவணங்கள், பல கோடி ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்கள் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், வங்கி கணக்குகள், ஊழியர்களின் ஊதியம் கணக்குகள், மின்வாரியத்தில் ஒப்பந்தம் எடுத்த ஆவணங்கள், வெளிநாட்டு முதலீடுகள், பொருட்கள் கொள்முதல் செய்த ஆவணங்களை அதிகாரிகள் கணக்காய்வு செய்து வருகின்றனர். இந்த பணி முடிந்த பிறகு தான் ராதா இன்ஜினியரிங் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் எத்தனை கோடி வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவரும். முன்னாள் மின்வாரிய அதிகாரி காசி பணிக்காலத்தில் எவ்வளவு சொத்துக்கள் வாங்கி உள்ளார் என்பது குறித்து காசி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.