கொடைக்கானல்: கொடைக்கானலில் கோயில் திருவிழாவிற்கு வந்த போலீஸ்காரர் மின்சாரம் தாக்கி பலியானார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பெருமாள்மலையை அடுத்த கணேசபுரம் அஞ்சு வீடு பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் கணேசன் (29). இவர் கடந்த 2022ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது கோயம்புத்தூரில் பட்டாலியன் போலீசாக பணியாற்றி வந்தார். கோயில் விழாவிற்காக கொடைக்கானல் வந்த கணேசன் நேற்று முன்தினம் மாலை தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் இருந்து மண்வெட்டி எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக இவரை மீட்டு பெருமாள்மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரில், கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.