சென்னை: வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை, அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என தமிழக அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிகளின்போது தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் மின் வாரியத்துக்கான கடனில் ரூ.12 ஆயிரத்து 647 கோடி அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, 31.3.2021 அன்று வரை ரூ.1,13,266 கோடியாக உயர்ந்தது.
மேலும், அன்றைய தேதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகத்தின் மொத்த கடன் நிலுவைத் தொகை ரூ.1,59,823 கோடியானது. இதன் காரணமாக, கடன் வாங்கிய நிதிகளுக்கான வட்டியும் 259% அதிகரித்து வருடத்திற்கு ரூ. 16,511 கோடியாக உயர்ந்தது. மேலும், அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்தில் சேர ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டனர். அதிமுக ஆட்சியில் செய்த இந்த தவறு காரணமாக மின்கட்டணத்தை கட்டாயம் உயர்த்த வேண்டிய நிலை 2022ம் ஆண்டு ஏற்பட்டது.
ஒன்றிய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் உத்தரவுகளின்படி, மின் கட்டணத் திருத்தம் என்பது ஒன்றிய அரசின் திட்டங்களின் கீழ் நிதி பெறுவதற்கான கட்டாய முன் நிபந்தனையானதே முக்கிய காரணமாகும். மேலும், ரிசர்வ் வங்கியும், ஒன்றிய அரசின் மத்திய நிதி நிறுவனங்களும், ஆண்டுதோறும் மின் கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன. சிஇஆர்சி/ஏபிடிஇஎல் போன்ற பல தேசிய சட்ட அமைப்புகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகம் மின் கட்ட ணம் திருத்தம் செய்யாதது குறித்து அவ்வப்போது கண்டனம் தெரிவித்துள்ளன.
எனவே, வேறு வழியின்றி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில்தான், தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. ஆனால், வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கை:
சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, ஏற்கனவே 20.5.2025 அன்று வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது மீண்டும் மின் கட்டணம் குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால், இதுகுறித்து மீண்டும் அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்படுகிறது.
தற்போது, மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை. முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது.
தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* மின் கட்டண உயர்வு குறித்து எந்த ஆணையும் தற்சமயம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடவில்லை.
* மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டாலும், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
* 100 யூனிட் மின்சாரம் உள்பட அனைத்து சலுகைகளும் தொடரும்.