ஆண்டிபட்டி, ஏப். 29: ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி ஊராட்சி செயலராக முத்துக்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். பிச்சம்பட்டி கிராமத்தில் எம்.கே.டி. நகரில் ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டார் பழுதான நிலையில், அதனை சரி செய்வதற்காக மோட்டாரை எடுத்துக் கொண்டு முத்துக்குமார் ஆண்டிபட்டி நகருக்கு சென்றுள்ளார். அப்போது சுமார் 130 மீட்டர் அளவுள்ள மின் வயரை அங்கேயே வைத்து விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மின்வயர் காணவில்லை. இதுகுறித்து முத்துக்குமார் ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராம்பாண்டி, செந்தில்(40), வீரக்குமார்(30), மற்றும் சிலம்பரசன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செந்தில், வீரக்குமார், சிலம்பரசன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராம்பாண்டி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.