கன்னியாகுமரி: தாயை கிண்டல் செய்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரை நேற்று மாலை தேங்காய் வெட்டும் தொழிலாளி அரிவாளால் வெட்டிக் ெகாலை செய்தார். குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே கண்டளவு பகுதியை சேர்ந்தவர் எபி ஜான்சன்(45). பூதப்பாண்டி மின்வாரிய ஒப்பந்த ஊழியர். இவருக்கு சவுதிகா(37) என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். எபிஜான்சன், காட்டுப்புதூரை சேர்ந்த அழகப்பன் மனைவி ஜெயாவை கிண்டல் செய்துள்ளார்.
அவர் தனது 22 வயது மகனான தேங்காய் வெட்டும் தொழிலாளி ஜெனித்திடம் கூறியுள்ளார். அவர், எபிஜான்சனிடம் தாயை கிண்டல் செய்தது தொடர்பாக தட்டிக்கேட்டு எச்சரித்து விட்டு சென்றுள்ளார்.
மீண்டும் எபிஜான்சன், ஜெயாவை கிண்டல் செய்து தகாதவார்த்தையால் திட்டியுள்ளார். இது ஜெனித்திற்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நேற்று மாலை 6.45 மணி அளவில் திட்டுவிளை தர்கா அருகே நின்றிருந்த எபிஜான்சனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றவே ஜெனித் மறைத்து வைத்திருந்த தேங்காய் வெட்டும் அரிவாளால் எபிஜான்சன் தலையில் வெட்டினார். இரு இடங்களில் வெட்டு விழுந்த எபிஜான்சன் கீழே சரிந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த போது எபிஜான்சன் இறந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிந்து ஜெனித்தை பிடித்து விசாரித்து வருகின்றனர்.