செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியில் மின்வாரிய ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் ஒருவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உத்திராடம் (51). இவர் சென்னை நங்கநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், இவரது தம்பி சங்கர் குடும்பத்திற்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரையில் நடைபயிற்சி சென்றபோது சங்கரின் மகன் சுபாஷ் (19) உத்திராடத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதுதொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளி சுபாஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சுபாஷ் செங்கல்பட்டு நீதிமன்றம் ஜேஎம்-2 நீதிபதி முன் சரணடைந்தார். அப்போது, நீதிபடி, சுபாஷின் சரணை ஏற்க மறுத்தார். இதையடுத்து, வழக்கறிஞர்கள் சுபாஷை கூடுவாஞ்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கொலை சம்பவம் தொடர்பாக சுபாஷிடம் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.