பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில், மின் கம்பத்தில் ஏறி மின் பழுது நீக்கிக் கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி லைன்மேன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பள்ளிப்பட்டு அருகே நொச்சிலி டி.வி. கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் விநாயகம் (38). தொட்டி கண்டிகை என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு ஜெயந்தி (33) என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ளது.
இவர், பள்ளிப்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் லைன்மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிப்பட்டு-சோளிங்கர் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் அப்பகுதி மின் கம்பம் மீது ஏறி விநாயகம் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கம்பத்தின் மீது செல்லும் உயர் மின்னழுத்த கம்பி விநாயகம் மீது பட்டதில் மின்சாரம் பாய்ந்து உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இதில், விநாயகம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, பள்ளிப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விநாயகத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பள்ளிப்பட்டு மின் வாரிய இளநிலை பொறியாளர் ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.