சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 29ம் தேதி வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இந்திய தேர்தல் ஆணையம், ஜனவரி 1ம் தேதி மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய ஒவ்வொரு காலாண்டிலும் 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்கலாம்.
இனி, ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். வாக்காளர் பெயர் சேர்க்கைக்கு பிறகு, உரியவருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் பட்டியலினை, தலைமை தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்க்கலாம்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போதும் செயல்பாட்டில் உள்ளது. 1.4.2025 அன்று 18 வயது நிரம்பிய மற்றும் தகுதியுள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதேபோன்று, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடக்கும். இந்த ஆண்டு இரண்டு கட்டமாக இந்த பணிகள் நடத்தப்பட வேண்டும். முதலில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்காக வருகிற 20ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
அப்போது, இறந்தவர்கள், ஒரு பெயர் இரண்டு இடங்களில் இருந்தால் நீக்கப்பட வேண்டும். அடுத்து அக்டோபர் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து வருகிற அக்டோபர் 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். அக்டோபர் 19ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை பெறலாம்.
இந்த நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். முகாமில் பொதுமக்கள் நேரில் வந்து விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறப்பு முகாம்கள் குறித்த தேதியை தலைமை தேர்தல் அதிகாரிகளே முடிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் பெற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான பணிகள் முடிந்ததும், 2025 ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்.