மதுரை: ரயில்வே துறையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். 2024-25ம் நிதி ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்பு போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்ட நிதி, 2024-25 முழுமையான பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் ரயில்வே பிங்க் புத்தகம் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள X தள பதிவில் தெரிவித்ததாவது;
ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள். புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு கர்நாடகாவை உள்ளடக்கிய தென்மேற்கு ரயில்வேக்கு 1448 கோடி ஒதுக்கிய ரயில்வே துறை தமிழ்நாட்டிற்கு உள்ளடக்கிய தெற்கு ரயில்வேக்கு வெறும் 301 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. ஆனால் தேர்தலுக்கு முன் இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகாவின் புதிய வழித்தடங்களுக்கு 2286 கோடி அறிவித்துவிட்டு இப்போது 1448 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தெற்கு ரயில்வேக்கு 971 கோடு அறிவித்து விட்டு 301 கோடி மட்டுமே தந்துள்ளது இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.