Saturday, February 24, 2024
Home » தேர்தலுக்கு முன் ‘இந்தியா’ கூட்டணியை பலவீனப்படுத்தும் பாஜக; இக்கட்டான நேரத்தில் ராகுலின் யாத்திரை பலன் தருமா?: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பெரும் கவலை

தேர்தலுக்கு முன் ‘இந்தியா’ கூட்டணியை பலவீனப்படுத்தும் பாஜக; இக்கட்டான நேரத்தில் ராகுலின் யாத்திரை பலன் தருமா?: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பெரும் கவலை

by Suresh

புதுடெல்லி: ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் பிரச்னை ஒருபக்கம் என்றால், கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியை பாஜக செய்து வருகிறது. இக்கட்டான இந்த நேரத்தில் ராகுல் காந்தி டெல்லியில் இல்லாமல் யாத்திரையில் கவனம் செலுத்துவது காங்கிரசை பலவீனப்படுத்தும் என்று மூத்த தலைவர்கள் பெரும் கவலையில் உள்ளனர். இந்திய ஒற்றுமை யாத்திரையின் இரண்டாம் கட்ட யாத்திரையான இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார்.

பல்வேறு மாநிலங்கள் வழியாக அசாம் வந்த அவரது யாத்திரை, பின்னர் மேற்கு வங்கத்திற்குள் நுழைந்தது. தற்போது மேற்குவங்கத்தில் இருந்து பீகாருக்குள் நுழைந்துள்ளது. கிஷன்கஞ்ச் மாவட்டத்துக்குள் நுழைந்த ராகுல் காந்தியின் பேருந்துக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேநேரம் மேற்குவங்கத்தின் மால்டாவில் ராகுல் காந்தி பயணம் செய்த காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கல் வீச்சு காரணமாக ராகுல் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது என்று குற்றம் சாட்டினார்.

ஆனால் கார் திடீரென பிரேக் போட்டதால் விபத்து ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி விளக்கமளித்தது. மேலும் இச்சம்பவம் பீகாரில் நடந்ததாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். ஆனால் மேற்குவங்கத்தின் ஹரிச்சந்திரபூரில் கல்வீச்சு சம்பவம் நடந்ததாக காங்கிரஸ் கூறியுள்ளது. மேற்குவங்க எல்லைக்கு அருகில் உள்ள பீகாரில் உள்ள கதிஹாரில் சம்பவம் நடந்ததாக மம்தா பானர்ஜி கூறினார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மால்டா போலீசார் தெரிவித்தனர்.

‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் மம்தா பானர்ஜி, கூட்டணி கட்சி தலைவர் ஒருவர் மாநிலத்தில் யாத்திரை செல்லும் போது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவருகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க, லோக்சபா தேர்தல் வியூகம், நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் ெதாடர், பீகாரில் கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார் திடீரென விலகி பாஜக கூட்டணிக்கு தாவியது, உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு 11 சீட் தான் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் அறிவித்தது, மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்திருப்பது, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது போன்றவை ராகுல் காந்திக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுத்துள்ளன.

இக்கட்டான இந்த நேரத்தில் தலைநகர் டெல்லியில் இருக்க வேண்டிய ராகுல்காந்தி, வடகிழக்கு மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டிருப்பது கூட்டணி மட்டுமின்றி காங்கிரசையும் பலவீனப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராகுலின் யாத்திரையானது வடகிழக்கு முதல் மேற்கு மாநிலங்கள் வரை செல்வதால், தேர்தலில் காங்கிரசுக்கு அரசியல் ரீதியாக பலன் அளிக்குமா? என்பதில் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தவறான நேரத்தில் யாத்திரை பயணம் செய்ய ராகுல் முடிவு செய்ததாக காங்கிரசின் ஒரு பிரிவினர் கூறிவருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, ‘இந்தியா’ கூட்டணியை முடிந்தவரை பலவீனப்படுத்த பாஜக முயற்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் அதற்கு எதிராகப் போராடாமல் தனது முழு ஆற்றலையும், கவனத்தையும் பயணத்தில் குவித்து வருகிறது.

அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்தும் நோக்கில் இந்த யாத்திரை குறைந்தது சில மாதங்களுக்கு முன்னரே செய்திருக்க வேண்டும். லோக்சபா தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உருவாக்குதல் போன்ற விஷயங்களில் ராகுல் காந்தி கவனம் செலுத்த வேண்டிய நிலையில், அவர் நாட்டின் தொலைதூர மாநிலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டிருப்பது காங்கிரசுக்கு அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டால், ராகுல்காந்தி தனது யாத்திரையை (மும்பையில் மார்ச் 20ல் முடிகிறது) பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று மூத்த தலைவர்கள் கவலையடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

3 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi