வாஷிங்டன்: 2020ல் நடந்த தேர்தலில் தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்ததாக அமெரிக்க மாஜி அதிபர் டிரம்ப் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் டிரம்ப், தான் வெற்றி பெறுவதற்காக பல்வேறு முறைகேடுகளை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்றங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த தேர்தலில் தான் போட்டியிடுவதாக டிரம்ப் கூறியுள்ளார். அதற்கான பிரசாரங்களையும் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் டிரம்புக்கு எதிராக 2020ல் நடந்த தேர்தலில் தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்ததாக அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. கடந்த 4 மாதங்களில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட மூன்றாவது குற்றவியல் குற்றச்சாட்டு ஆகும். டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக 45 பக்க குற்றப்பத்திரிகையை பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த குற்றப்பத்திரிகையில் டிரம்ப் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வரும் அதிபர் தேர்தலுக்கு முன் டிரம்புக்கு எதிராக அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படுவதால், அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.