‘‘அரசியல்வாதிகளோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் காக்கி அதிகாரிகளுக்கு திடீர்னு கிலி ஏற்பட்டிருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுவையில் சமீபத்தில் கவர்னராக பொறுப்பேற்ற சிபிஆர், காவல் துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தினாரு.. அப்போது கஞ்சா, கொக்கைன், அபின் போன்றவை அதிகமாக புழக்கத்தில் இருக்குது.. பள்ளி மாணவர்கள் முதல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் வரை போதை பழக்கத்துக்கு அடிமையாகி கிடக்கிறாங்க… இதனால எதிர்கால இளைஞர்கள் சமுதாயம் சீரழிவுக்கு காரணமா அமைஞ்சிடும்.. எனவே, இதை முற்றிலும் ஒடுக்க வேண்டும்னு போலீஸ் உயரதிகாரிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தாராம்… அதனை தொடர்ந்து, கவர்னரை தனியாக சந்தித்து பேசிய காவல்துறை அதிகாரிங்க, கஞ்சா விற்பனையில் அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதுபற்றி பகீர் தகவலை போட்டு உடைச்சிட்டாங்களாம்.. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பவர்புல் அதிகாரி, யாராக இருந்தாலும் கைது செய்யணும்.. கடும் நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கணும்.. அரசியல்வாதிகளோடு தொடர்பு வைச்சு கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கும் போலீசாரை அடையாளம் கண்டு அறிக்கை அளிக்கணும்னு அதிகாரிகளுக்கு உத்தரவும் போட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல், ஜூன் முதல் வாரத்தில் முடிந்துவிடும்.. அப்புறம் அரசியல்வாதிகளோடு தொடர்பில் இருந்து கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை ஊக்குவித்த போலீஸ் அதிகாரிகங்க மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்போ கலக்கத்தில் இருப்பதா சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘உருட்டல், மிரட்டல் விடுத்து குப்பையில் கோடிகோடியா குவிக்கிறாங்களாமே தெரியுமா?..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சி சார்பில், மாநகரில் அன்றாடம் சேகரிக்கும் குப்பை, வெள்ளலூரில் உள்ள 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட மெகா குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு, மலைபோல் குப்பை தேங்குவதை தவிர்க்க, மாநகரில் வார்டு வாரியாக ‘மைக்ரோ காம்போசிங் சென்டர்’ (எம்.சி.சி.) அமைக்கப்பட்டு, அங்கேயே பாதி அளவு குப்பை திருப்பி விடப்பட்டு, மக்கும் குப்பை உரமாக மாற்றப்படுது.. இப்பணி, ஒப்பந்ததாரர்கள் மூலமா செய்யப்படுது.. இதில், மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ஒருவர், சுகாதார ஆய்வாளர் ஒருவர் என இரண்டு பேர், ஒப்பந்ததாரர்களை கைக்குள் போட்டுக்கொண்டு, நன்றாக காசு குவிக்கிறார்களாம்.. இந்த விவகாரத்தில் மாதம்தோறும் பல லட்சம் கைமாறுகிறதாம்.. இதுதவிர, இவர்கள் இருவரும் மாநகரில் கடை, கடையாக ஏறி, இறங்கி, அந்த லைசென்ஸ் வாங்கியாச்சா…, இந்த லைசென்ஸ் வாங்கியாச்சா.. என உருட்டல், மிரட்டல் விடுத்து, அதிலும் கரன்சி குவித்து வருகிறார்களாம்.. இவர்களை கண்காணிக்க வேண்டிய மாநகராட்சி நகர்நல அலுவலர், சுத்தமாக கண்டுகொள்வதில்லையாம்.. குப்பை பிரிவில் இருந்துகொண்டு, கோடிக்களை குவிக்க முடியும் என்பதற்கு இவங்களே சிறந்த உதாரணம் என்கிறார்கள், சில நியாயமான மாநகராட்சி ஊழியர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்னால தனது பதவியை தக்க வைக்கும் வேலையில் மாஜி அமைச்சர் ஒருத்தர் இறங்கியிருக்கிற கதையை சொல்லுங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மக்களவை தேர்தலில் கடலோர தொகுதியில் போட்டியிட இலைக்கட்சி சார்பில் தனக்கு வேண்டிய நபரை மாஜி அமைச்சர் நிறுத்தியிருந்தாரு.. தேர்தல் முடிவுக்கு முன்பே வேட்பாளர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்னு அந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தெரிந்துபோச்சாம்.. இந்த தகவல் தலைமையிட கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கு.. இது ஒரு பக்கம் இருக்க, மாஜி அமைச்சரை கட்சிக்குள்ளே நிர்வாகிகள் மட்டுமல்ல, அடிமட்ட தொண்டர்கள் கூட கலாய்க்க தொடங்கிட்டாங்களாம்.. இந்த தகவல் தெரிய வரவே மாஜியானவர், நெருங்கிய ஆதரவாளர்களிடம் சொல்லி புலம்பி வருகிறாராம்… மாவட்ட செயலாளர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்றால் தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்னதாக கட்சியில் நிர்வாகிகளை தனது பக்கம் தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையில் இறங்கவும் முடிவு செய்திட்டாராம்.. இதற்காக கட்சியில் தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் ஆலோசனை வேற நடத்தியிருக்கிறாரு.. தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் நிற்க வைக்க வேண்டிய வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து விடவேண்டும். குறிப்பாக, கட்சியில் தன்னை மதிக்க கூடிய நிர்வாகிகளை தான் தேர்வு செய்யணும்னு என்றாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வாக்கு எண்ணிக்கை முகவர் பணிக்கு ஆட்கள் சேர்க்கும் அளவுக்கு இலைக்கட்சியின் நிலைமை போயிருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்ட தொகுதியில் தாமரைக்கட்சி தலைமையிலான கூட்டணியில் தேனிக்காரர், முக்கனியில் 2வது பழ சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டாரு.. அங்கு இலைக்கட்சி சார்பில் போட்டியிட்டவரிடம் அக்கட்சி நிர்வாகிகள் தேர்தல் செலவிற்காக பணத்தை வாங்கிக் கொண்டு, தேனிக்காரருக்கு ஆதரவாக மறைமுகமாக வேலை பார்த்ததாக கட்சி தலைமைக்கு ஏற்கனவே புகார்கள் பறந்திருக்கு… ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில், மின்னணு இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கு.. வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு டேபிளின் எண்ணிக்கைக்கும் ஏற்ப வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பாங்க.. இந்த தொகுதியை பொறுத்தவரை மற்ற கட்சி வேட்பாளர்களின் சார்பில் முகவர்களுக்கான அடையாள அட்டைகளை வாங்கியுள்ளனராம்.. ஆனால், இலைக்கட்சி வேட்பாளரின் தரப்பில் மட்டும் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான அடையாள அட்டை பெறுவதில் கட்சி நிர்வாகிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லையாம்.. இலைத்தரப்பிற்கு குறிப்பிடும்படியான அளவிற்கு வாக்குகள் கிடைக்காது என்பதால் யாரும் ஆர்வம் காட்டவில்லையாம்.. இதனால், அதிருப்தியான இலை வேட்பாளர் தரப்பு தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் முகவர் பணிக்கு ஆட்களை சேர்த்துள்ளதாம்.. கடலோர மாவட்டத்தில் இதுதான் தற்போதைய பரபரப்பான ஹாட் டாபிக்…’’ என முடித்தார் விக்கியானந்தா.
தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்னால தனது பதவியை தக்க வைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
142