புதுடெல்லி: பொது மக்கள் எங்கு வசிக்கிறார்களோ அந்த தொகுதியில் மட்டுமே தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. பீகார் உட்பட 6 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக வெளிநாட்டினர், சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பிறந்த இடத்தை சரிபார்த்து அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியும். பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தீவிரமாக மதிப்பாய்வு செய்து வருகின்றது. இதனை தொடர்ந்து அசாம் கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் வாக்குப்பதிவு மைய அதிகாரிகள் அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கலந்து கொண்டு பேசியதாவது,‘‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஒருவர் எங்கு வசிக்கிறாரோ? அந்த சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வாக்களிப்பதற்கு உரிமை உண்டு. எடுத்துக்காட்டாக நீங்கள் டெல்லியில் வசித்து வரும்போது பாட்னாவில் வீடு வைத்திருந்தால் நீங்கள் பீகார் மாநிலம், பாட்னாவில் அல்ல டெல்லியில் வாக்காளராக பதிவு செய்யப்பட வேண்டும். பலர் ஒரே இடத்தில் குடியிருக்கின்றனர். அந்த தொகுதியில் இருந்து வாக்காளர் அட்டையை பெற்றுள்ளனர். அதே நேரத்தில் இடம்பெயர்வதற்கு முன்பு இருந்த அடையாள அட்டையையும் அவர்கள் வைத்துள்ளனர். இது ஒரு குற்ற செயல் ஆகும்” என்றார்.
* கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு ஒத்திவைப்பு
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் அவசர கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியின் சட்ட ஆலோசகர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்காக தேர்தல் ஆணையம் ஜூலை 2ம் தேதியை ஒதுக்கியிருந்தது. ஆனால் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக எந்த கட்சியும் உறுதிபடுத்தாததால் இந்த கூட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
* திரிணாமுல் காங். குழு சந்திப்பு
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஐந்து பேர் கொண்ட குழு இந்திய தேர்தல் ஆணையத்தை சந்தித்தது. அப்போது நகல் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து திரிணாமுல் குழு கேள்வி எழுப்பியது. வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கான அடிப்படை ஆண்டாக 2024 இருக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரை செய்துள்ளது.