புதுடெல்லி: தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.1,760 கோடி பணம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதி கடந்த மாதம் 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், அதற்கான அரையிறுதி ஆட்டமாக கருதப்படுவதால், 5 மாநில தேர்தல் தேசிய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் சூறாவளி பிரசாரங்கள் நடந்து வருகின்றனர். இதுவரை மிசோரம், சட்டீஸ்கர், மத்தியபிரதேசத்தில் தேர்தல் முடிந்துள்ளது.
ராஜஸ்தானில் வரும் 25ம்தேதியும் தெலங்கானாவில் 30ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் இதுவரை வாக்காளர்களை கவரும் வகையில், பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம், போதைப் பொருட்கள் என ரூ.1,760 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கும் போதே, இம்முறை கண்காணிப்பு கடுமையாக இருக்கும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.