பாட்னா: ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பொது மக்களை சந்தித்து தனது கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்காக பீகாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பெகுசாராயில் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல்காந்தி மகாராஷ்டிரா தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்படவில்லை என்று செய்தித்தாளில் கட்டுரை எழுதியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர் கூறுகையில்,” காங்கிரஸ் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி.
மக்களவையில் ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவர். எனவே அவர் எழுப்பிய எந்த சந்தேகங்களுக்கும் தேர்தல் ஆணையம் தெளிவாக பதில் அளிக்க வேண்டும். அவர் பேட்டி மூலமாக தனது கருத்தை தெரிவிக்கவில்லை. செய்தித்தாளில் கட்டுரை மூலமாக எழுத்துமூலமாக குற்றம்சாட்டியிருக்கிறார். தேர்தல் செயல்முறையின் நியாயத்தன்மை குறித்து மக்கள் மனதில் சந்தேகங்கள் இருந்தால் அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. எனவே தேர்தல் ஆணையம் முன்வந்து அனைத்து சந்தேகங்களையும் நீக்க வேண்டும்” என்றார்.