புதுடெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின்போது தாங்கள் இந்தியர்கள்தான் என்பதை நிரூபிக்க பல்வேறு ஆவணங்களை வாக்காளர்கள் தரவேண்டும் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் தற்போது இதில் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜ கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் வரும் அக்டோபரில் சட்ட பேரவை தேர்தல் நடக்க உள்ளது. பேரவை தேர்தலையொட்டி மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 21ன் படி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதனால் பீகாரில் கடந்த 2003ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் அனைவரும் தாங்கள் இந்தியர் என்பதை நிரூபிக்க தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 1987 ஜூலை 1 முதல் 2002ம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள் மொத்தம் 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதில், முக்கியமாக தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளையும் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆவணங்களில் ஆதார் மற்றும் 100 நாள் வேலை திட்ட அட்டை ஆகியவை ஏற்று கொள்ளப்படாது என அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பீகாரில் மொத்தம் 7.89 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால் பீகாரில் உள்ள 40 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடும் நிலை உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் வெளி மாநிலங்களில் வேலை பார்க்கிறார்கள். அவர்களிடம் எந்த ஆவணங்களும் இருக்காது. இதில் 2.5 கோடி பேர் தங்களுடைய வாக்குரிமையை இழக்கும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையரை காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சந்தித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகு தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சியினரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்திருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை,வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாகும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் பணிந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விதிகளில் தளர்வுகளை நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தி நாளிதழ்களில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளம்பரங்களில், வாக்காளர் பதிவுக்கான விண்ணப்பம் கிடைத்த உடனே, அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்தால்போதும். ஜூலை 25ம் தேதிக்குள் ஆவணங்களை பூத் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம் .
அவர்களால் இயலவில்லையென்றால்,அந்த குறிப்பிட்ட தேதிக்கு பிறகும் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும். ஆவணங்களை சமர்ப்பித்தால் அதனடிப்படையில் விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்கு வாக்காளர் பட்டியல் அதிகாரிக்கு உதவியாக இருக்கும். ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால்,உள்ளூரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டோ அல்லது இதர துணை ஆவணங்களின் அடிப்படையிலோ அவர் முடிவு எடுப்பார். இந்திய அரசியல் சட்டத்தின்படி இந்திய குடிமகன்கள் மட்டுமே வாக்களிப்பதற்கு உரிமை உள்ளது.
அரசியல் சட்டம் மிகவும் உயர்வானது. அனைத்து மக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை அரசியல் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளருக்கான விண்ணப்ப படிவம் ஜூலை 26 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு ஆகஸ்ட் 1 ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்படும்.
* உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பீகார் தேர்தலையொட்டி ஜூன் 24ல் பிறப்பித்த உத்தரவு பல அரசியல் விதிகள், சட்ட பாதுகாப்புகளை மீறுவதாகவும் இதுதொடர அனுமதிக்கப்பட்டால் நாடு முழுவதும் தகுதியான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பதற்கு வழி வகுக்கும் என குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
* கார்கே தாக்கு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் பீகார் மக்களின் வாக்குகளை பறிப்பதற்கு பாஜ சதி செய்கிறது. தற்போது எதிர்ப்பு கிளம்பியதால் பணிந்துள்ளது தேர்தல் ஆணையம். ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுக்காக பாஜ கட்சிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.