Sunday, April 14, 2024
Home » தேர்தல் பத்திர ஊழலை மறைக்க முயற்சி திருவிழா கூட்ட திருடன் போல செயல்படும் பாஜ: தோல் உரித்த முத்தரசன்

தேர்தல் பத்திர ஊழலை மறைக்க முயற்சி திருவிழா கூட்ட திருடன் போல செயல்படும் பாஜ: தோல் உரித்த முத்தரசன்

by Karthik Yash

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால் ஊழல் நிறைந்த கட்சியாக பாஜதான் உள்ளது. இது தேர்தல் பத்திரம் விவகாரம் மூலம் அப்பட்டமாக வெளியாகி உள்ளது. தேர்தல் பத்திரங்களின் விவரங்களை கொடுக்க, ஜூன் 30ம் தேதி வரை எஸ்பிஐ கால அவகாசம் கேட்டுள்ளது. ஊழலை மறைக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. இதற்கு உச்சநீதிமன்றம் பணிந்து விடாமல், தீர்ப்பில் உறுதியாக இருக்க வேண்டும்.

பாஜவின் ஊழல் முகத்தை நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த மார்ச் 13ம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் பொய்யான தகவல்களை திரும்ப, திரும்ப சொல்லி வருகிறார். அவர் அரசியல் நாகரீகத்தை பின்பற்றி பேச வேண்டும். திமுக என்ற கட்சியை அழிப்பேன் என்பதின் மூலம் மோடியின் உண்மையான ஹிட்லர் முகம் வெளிப்படுகிறது. நாட்டில் தங்களது கட்சி மட்டுமே இருக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிதி வழங்கியதாக பிரதமர் மோடி, பொய் கூறி வருகிறார்.

இதுவரை ஒரு பைசா கூட வழங்கவில்லை. அதேசமயம், பிரசார கூட்டத்தில் வெள்ள நிவாரணத்திற்கு பணம் வழங்கியதாகவும், சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி வழங்கியதாகவும் பொய்யான தகவலை கூறி வருகிறார். திருவிழா கூட்டத்தில் நகையை திருடிய திருடன், தான் சிக்காமல் இருப்பதற்காக திருடன், திருடன் என்று கத்திக்கொண்டே மக்களை திசைத்திருப்புவான். அதுபோன்ற திருவிழா கூட்ட திருடனாகத்தான், பாஜ செயல்பட்டு வருகிறது. ஒரு பொய்யை திரும்பத், திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்பது போல, பிரதமர் மோடி தரம் தாழ்ந்து பேசி வருகிறார்.

குஜராத் போதை பொருளின் தலைமையிடமாக உள்ளது. அங்குள்ள அதானி துறைமுகம் மூலம் தான், போதை பொருள்கள் இந்தியாவிற்குள் வருகிறது. அதனை தடுக்க ஒன்றியத்தில் ஆளும் பாஜ அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானி, அம்பானி தான் வளர்கிறார்கள். சாதாரண மக்கள் துளியும் வளர்ச்சி பெறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* இந்தியாவில் இதுவரை கண்டிராத மோடியின் மிகப்பெரிய ஊழலை உச்சநீதிமன்றம் வௌியே கொண்டு வர வேண்டும்: ஒரே போடு போட்ட செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: உச்சநீதிமன்றம் மார்ச் மாதத்திற்குள் தேர்தல் பத்திர விபரங்களை வெளியிட வேண்டும் என்று வங்கிகளுக்கு ஆணையிட்டுள்ளது. ஆனால் ஈடி, சிபிஐ, ஐடியை எப்படி ஒன்றிய அரசு கைப்பாவையாக கைவசம் வைத்துள்ளதோ அதை வங்கிகளுக்கும் நீடித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜூன் மாதம் 10ம் தேதி வரை கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள். ஏன் அந்த அவகாசத்தை கேட்கிறார்கள். இந்த உண்மை வெளியே வந்தால் மோடியின் மிகப்பெரிய ஊழல் இந்தியா, இதுவரை கண்டிராத ஊழல் வெளியே வரப்போகிறது.

இந்திய நாட்டிற்கு அச்சுறுத்தும் நாடுகளில் இருந்து கூட நிதி வந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். தைரியம் இருந்தால், உண்மை இருந்தால் மோடி நிதியமைச்சரிடம் கூறி இந்த விபரங்களை வெளியிட வேண்டும். எதற்காக மோடி அஞ்சுகிறார், பயப்படுகிறார். எதற்காக நேரம் கேட்கிறார். ஒரு மணி நேரத்தில் வெளியிட வேண்டிய ஒரு அறிக்கை தகவலை எதற்காக நான்கு மாத காலம் நேரம் கேட்கிறார்கள் என்பது தான் எங்களது கேள்வி. இதனால் மிகப்பெரிய ஊழல் இந்திய நாட்டில் நடந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பு நீதிமன்றம் தலையிட்டு அதை வெளியே கொண்டு வர வேண்டும்.

போதைப்பொருள் வருவதற்கு காரணமே ஒன்றிய அரசுதான். குஜராத்தில் உள்ள முத்ரா துறைமுகம், கான்வா துறைமுகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது. அதானியின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு யார் போதை பொருளை இறக்குகிறார்கள் என்று வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். பாஜ ஆட்சியில் எவ்வளவு போதை பொருட்கள் பிடிக்கப்பட்டுள்ளது, எந்த துறைமுகத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளது என்று வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். வாக்கு சேகரிப்பதற்காக பொய், பித்தலாட்டம் செய்கிறார் மோடி. இவ்வாறு அவர் கூறினார். இந்திய நாட்டிற்கு அச்சுறுத்தும் நாடுகளில் இருந்து கூட நிதி வந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். தைரியம் இருந்தால், உண்மை இருந்தால் மோடி நிதியமைச்சரிடம் கூறி இந்த விபரங்களை வெளியிட வேண்டும். எதற்காக மோடி அஞ்சுகிறார், பயப்படுகிறார். எதற்காக நேரம் கேட்கிறார்.

* தேர்தல் பத்திரம் பாஜவின் நவீன ஊழல்: மதுரை எம்பி தாக்கு
மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாட்களானது. அது நவீன அறிவியலின் சாதனை. மும்பையிலிருக்கும் எஸ்பிஐ, புதுடெல்லியிலிருக்கும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திர விவகாரத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்பது நவீன ஊழலின் சாதனை. 40 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாக இருக்கும் எஸ்பிஐ வங்கி, இனி மோடியின் பின்னொட்டாக இணைத்து கொள்ளட்டும். இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

* திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கைய பிடிச்சு இழுத்தாலும் வரமாட்டாங்க… கண் அடிச்சாலும் வரமாட்டாங்க…. ஜெயக்குமாருக்கு எப்போதும் தமாசுதான்; அமைச்சர் துரைமுருகன் லகலக
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கதிர் ஆனந்த் எம்பி அண்ணா அறிவாலயத்தில் நேற்று விருப்பமனு தாக்கல் செய்தார். அப்போது உடன் வந்த திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அளித்த பேட்டி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்கள் பொன்னும் பொருளும் கொடுத்தவர்கள் தான் பேச உரிமை உள்ளவர்களே தவிர, வானத்தில் இருந்து பறந்து வந்து பார்க்காதவர்கள் அதை பற்றி பேச உரிமை இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

பிரதமர் மோடி, மற்றவரை எல்லாம் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று சொல்லிவிட்டு இவர் தேசமே குடும்பம் என்று அரசியல் பண்ணுகிறார். திமுக கூட்டணியில் விரைவில் பேச்சுவார்த்தை நிறைவடையும். கூட்டணி கட்சிகளுக்கும் சில வேலைகள் இருக்கும். அதில் கவனம் செலுத்துவார்கள். திமுக கூட்டணியில் எந்த பாதகமும் இல்லை. திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கேட்கிறீர்கள். ஒரு படத்தில் நான் கேள்வி பட்டேன். ‘கைய பிடிச்சு இழுத்தா வராதவ கண் அடிச்சா மட்டும் வரவா போறா’ என்ற வசனம் வரும். அது மாறி யாரும் கண் அடிச்சாலும் வரமாட்டாங்க…கை பிடிச்சு இழுத்தாலும் வரமாட்டாங்க. முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எப்பொழுதுமே தமாசாக பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

19 − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi