வயநாடு: சமீபத்தில் நடைபெற்ற கேரள மாநிலம் வயநாடு மக்களவை இடைத்தேர்தலில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டு, 4,10,931 வாக்குகள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், பிரியங்கா காந்தியின் வெற்றியை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தன்னுடைய மற்றும் தனது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். நவ்யா ஹரிதாஸ் தாக்கல் செய்த தேர்தல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கேரள உயர் நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்குமாறு வயநாடு எம்.பி. பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, பாஜகவின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது ஒரு விளம்பர யுக்தி என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.