புதுடெல்லி: தமிழ்நாட்டில் ஜூன் 19ம் தேதி 6 ராஜ்யசபா எம்பி பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 4 இடங்களை திமுக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த 18 உறுப்பினர்களும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கான இடங்கள் தற்போது காலியாகிறது. அந்த வகையில் பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுகவை சேர்ந்த எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவை சேர்ந்த என்.சந்திரசேகரன், மதிமுகவை சேர்ந்த வைகோ ஆகியோரின் பதவிக்காலம் வருகின்ற 24.07.2025 அன்றுடன் முடிகிறது.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் மேற்கண்ட 6 இடங்களுக்கான தேர்தல் தேதியை வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 2ம் தேதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஜூன் 9ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். 12ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான நாளாகும். 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில் திமுக வசம் இருக்கும் 4 இடங்களை மீண்டும் கையகப்படுத்தும். அதிமுக இரு இடத்தையும் அக்கட்சி கைப்பற்றும். ஆனால் அதிமுக வெற்றிப் பெற பாமக, பாஜக ஆதரவு தேவைப்படும். அதே நேரத்தில் திமுக 5வது இடத்திற்கு போட்டியிட நினைத்தால் வெற்றிப் பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி திமுக 5 இடத்திற்கு போட்டியிட்டால் வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய
எம்எல்ஏக்கள் பலம்
திமுக – 125
காங்கிரஸ் – 18
விடுதலை சிறுத்தைகள் – 4
மதிமுக – 4
மா.கம்யூ. – 2
இந்திய கம்யூ.- 2
மமக – 2
தவாக – 1
கொமதேக – 1
அதிமுக – 65
பாஜக – 4
பாமக – 5