Wednesday, April 24, 2024
Home » ஓரிரு நாளில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு: கூட்டணியை இறுதி செய்ய கட்சிகள் தீவிரம்; தமிழக அரசியலில் பரபரப்பு

ஓரிரு நாளில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு: கூட்டணியை இறுதி செய்ய கட்சிகள் தீவிரம்; தமிழக அரசியலில் பரபரப்பு

by Karthik Yash

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. இதில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 2 கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படவில்லை.

மேலும் காங்கிரஸ், விசிக, மதிமுகவுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. விரைவில் அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் மனிதநேய மக்கள் கட்சியுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, பொதுசெயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, துணை பொதுசெயலாளர் தாம்பரம் யாக்கூப், மாநில செயலாளர்கள் மாயவரம் அமின், ஜெய்னுல் ஆப்தின் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: திமுகவுடனான கூட்டணியில் கடந்த 2013 முதல் இணைந்து பணியாற்றி வருகிறோம். அதேபோல், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு அளிக்கப்பட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். அதன்படி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளோம். திமுக தலைவரிடம் இந்த கோரிக்கையை எடுத்து கூறுவதாக கூறினர். மமக எந்த விதமான சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்.

அதனடிப்படையில், இந்தியா கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக செயலாற்றி வருகிறது. இந்தியா கூட்டணி வலுப்பெற தமிழ்நாடு முதல்வர் பெரும் பங்காற்றியுள்ளார். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால், இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் அதற்கு மமகவின் முழு ஆதரவும் உண்டு. எங்களை பொறுத்தவரை எந்த தொகுதியை கொடுத்தாலும் அதில் வெற்றி பெறும் வல்லமை திமுக கூட்டணிக்கு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றார்.

தொடர்ந்து திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம். இதனை முதல்வர் கனிவோடு பரிசீலிப்பார் என எதிர்ப்பார்த்து நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றார். ஓரிரு நாளில் விசிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால், திமுக கூட்டணியில் இன்னும் தொகுதிகள் ஓதுக்கப்படாத கட்சிகளுக்கு ஓரிரு நாளில் இடங்கள் ஒதுக்கப்பட்டு, கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் இல்லத்துக்கு சென்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் அக்கட்சியில் பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்னும் சீட் இறுதி செய்யப்படவில்லை. குழு அமைத்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், தேமுதிகவுக்கு 5 இடங்கள் கொடுக்க அதிமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தேமுதிக தரப்பு கூடுதலாக ஒரு மாநிலங்களவை எம்பி சீட் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே போல் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைப்பது குறித்தும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாமக நிறுவனர் ராமதாசை இரண்டு முறை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். ஆனாலும் இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை, முடிவானதும் தெரிவிக்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார். அதிமுக கூட்டணியில் பாமக 10 இடங்களும், ஒரு மாநிலங்களவை எம்பி சீட் கேட்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதிமுக தரப்பில் 7 நாடாளுமன்ற சீட் மட்டுமே தருவதாக உறுதி அளித்துள்ளது.

ஆனால், பாமக எப்படியும் ஒரு மாநிலங்களவை எம்பி சீட் வேண்டும் என்று விடாப்பிடியாக உள்ளது. அதனால் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது. ஆனாலும், இன்னும் ஒரு சில நாட்களில் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு பாமக, தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்பட்டு விடும் என்றே கூறப்படுகிறது. பாஜ கூட்டணியில் இணைந்த முதல் கட்சியாக தமாகா உள்ளது. 5 தொகுதிகள் கேட்டு பட்டியலை ஜி.கே.வாசன் பாஜ தலைமையிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், கொங்குமண்டலம், டெல்டா மாவட்டம், தென்மாவட்டத்தில் திருநெல்வேலி என 3 தொகுதிகளை இறுதி செய்யும்படியும், மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும் தமாகாவுக்கு கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் வெளிமாநிலத்தில் இருந்து ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று வாசன் கேட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் பாஜவின் தொகுதி பங்கீடு குழு நேற்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் ஜி.கே.வாசனுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. பாஜ குழுவில் இடம்பெற்றுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் மற்றும் தமாகா தரப்பில் ஜி.கே.வாசன், விடியல் சேகர், சக்திவடிவேல், என்.டி.எஸ்.சார்லஸ், ஆர்.எஸ்.முத்து, முனவர்பாஷா, கே.ஆர்.டி.ரமேஷ், ராணி கிருஷ்ணன், மாவட்ட தலைவர் சைதை மனோகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஓரிரு நாளில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் பாஜ சார்பில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பெரிய கட்சிகள் இடம்பெறாததால் விரைவில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் தெரிகிறது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

You may also like

Leave a Comment

8 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi