புதுடெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தரவுகளின் அறிக்கையை இரண்டு வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தேர்தல் பத்திர சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் மூன்றாவது நாளாக நேற்று விசாரணை நடைபெற்றது.
ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி,‘‘தேர்தல் பத்திரத்தை எல்லா இடங்களிலும் வாங்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ முடியாது. அளிப்பவர் மற்றும் வாங்குபவர் ஆகியோர்களுக்கு தனிப்பட்ட கணக்கு இருக்க வேண்டும். மேலும் ஒரு சதவீத வாக்குகள் பெற்ற கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களை பெற முடியும் என்ற நிபந்தனை போலியான கட்சிகள் நிதியை பெறக்கூடாது என்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என தெரிவித்தார்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதில்,‘‘ தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் எதன் அடிப்படையில் முன்னதாக அதனை எதிர்த்தது என்பது தெரிய வேண்டும் எனக்கூறிய தலைமை நீதிபதி, வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்டதாகவும், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவை வைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் பத்திர சட்டம் தொடர்பான விவகாரத்தில் கடந்த 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையில் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நிதி, அது யார் மூலம் வழங்கப்பட்டது உட்பட அனைத்து விவரங்களும் அடங்கிய புதுப்பிக்கப்பட்ட தரவின் தகவல்களை அறிக்கையாக இரண்டு வாரத்திற்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.