புதுடெல்லி: ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3 லட்சம் கோடி பெற ஒன்றிய அரசு முயற்சித்ததாகவும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் தனது லாபத்தின் ஈவுத்தொகையில் ஒரு பகுதியை அரசுக்கு வழங்க ஒதுக்குகிறது. பணமதிப்பிழப்புக்கு முந்தைய 3 ஆண்டுகளில், ரிசர்வ் வங்கி அரசுக்கு லாபத்தை பகிர்ந்து வழங்கியது என்று அவ்வங்கியின் துணை கவர்னராக இருந்த விரால் ஆச்சார்யா கூறியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ரூபாய் நோட்டு அச்சடிப்பதற்கான செலவினங்களால் ஒன்றிய அரசுக்கு வழங்க வேண்டிய ஈவுத்தொகை குறைக்கப்பட்டது.
இதன் விளைவாக 2019 தேர்தலுக்கு முன்னதாக, அரசின் கவர்ச்சிகர திட்டங்களின் செலவினங்களுக்காக 2018-ம் ஆண்டில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து கூடுதல் ஈவுத்தொகையை பெறும் அரசின் கோரிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கு ரிசர்வ் வங்கி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். இது வெளிப்படையாக ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது. இதை தொடர்ந்து, ஆச்சார்யா தனது பதவியை ஆறு மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.