ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தேர்தல் நெருங்கி வருவதால் சுயேட்சை எம்எல்ஏ ஒருவர் வாக்காளர்களின் செருப்புக்கு பாலிஷ் போட்டுக் கொடுத்து பிரசாரம் செய்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்த மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் தொடர்பான அறிவிக்கை வெளியாக உள்ளது.
அதனால் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் பிரசாரங்களை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சுயேட்சை எம்எல்ஏ ஹட்லா என்பவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் வாக்காளர்களின் காலணிகளை வாங்கி அதற்கு ‘பாலிஷ்’ போட்டுக் கொடுக்கிறார். மேலும் அப்பகுதியில் காலணி கடைக்கு வந்த மக்களின் காலணிகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் பாலிஷ் போட்டுக் கொடுத்தார்.
அவரது தனித்துவமான தேர்தல் பிரசாரம் ெதாடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வாக்காளர் ஒருவரின் காலணிக்கு பாலிஷ் போட்டுக் கொடுத்துவிட்டு, அந்த காலணியை தனது நெற்றியில் வைத்து வணங்குகிறார். வயதான வாக்காளர் ஒருவர், அவருக்கு ஆசீர்வாதம் வழங்குகிறார். இதுகுறித்து எம்எல்ஏ ஹட்லா கூறுகையில், ‘மக்களிடையே உள்ள சாதிய பாகுபாட்டை ஒழிக்கவே போராடி வருகிறேன். தொழிலாளர்களை எனது கடவுளாக கருதுகிறேன். அதனால் அவர்களின் காலணிகளுக்கு பாலிஷ் போட்டு கவுரவித்தேன்’ என்றார்.