மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று வரலாறு காணாத உச்சத்தில் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் 2,507.47 புள்ளிகள் உயர்ந்து 76,468.78 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 733.20 புள்ளிகள் அதிகரித்து 23,263.90 புள்ளிகளில் நிறைவடந்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் காரணமாக இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியது. அதே சமயம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்த்துள்ளது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.00 என்ற அளவில் உயர்ந்துள்ளது. 7 கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தலில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
இதையடுத்து பல்வேறு ஊடகங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்ட கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் சாதகமான யூகங்களால் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகளில் குறியீட்டு எண்கள் உயர்ந்துள்ளன.
இன்று பொதுத்துறை பங்குகளின் விலை 12 சதவிகிதம் வரை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் 18 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ.12லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.