புதுடெல்லி: ஆம்ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து அளித்துள்ள தேர்தல் கமிஷன், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய கட்சி அங்கீகாரம் பறிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தேசிய கட்சியாகவும், மாநில அளவில் போட்டியிடும் கட்சிகள் மாநில கட்சிகளாகவும் தேர்தல் கமிஷன் அங்கீகரித்து உள்ளது. இதன்படி ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட, மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (11 இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இதே போல் மாநில கட்சி அந்தஸ்து பெற வேண்டும் என்றால் அந்த மாநிலத்தில் அதன் தொகுதிகளில் 3 சதவீதம் வெற்றி பெற வேண்டும். அல்லது 6 சதவீத வாக்குகள் மற்றும் 2 தொகுதிகள் பெற்றாலும் மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கும். இந்த அந்தஸ்து வழங்குவது பற்றி மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் கமிஷன் ஆலோசனை செய்து முடிவுகளை அறிவிக்கும். தற்போது குஜராத் தேர்தல் முடிந்த பிறகு இதுகுறித்து தேர்தல் கமிஷன் முடிவு செய்து அறிவித்து உள்ளது. அதன்படி டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் மாநிலங்களில் மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் இயங்கும் ஆம்ஆத்மி கட்சி தற்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தேசிய அளவில் ஆம்ஆத்மி கட்சி சின்னமாக துடைப்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி தற்போது நடக்கிறது. அதேநேரத்தில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்டு இருந்த தேசிய கட்சி அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
*பாமக மாநில கட்சி அந்தஸ்து புதுவையில் ரத்து
பாட்டாளி மக்கள் கட்சி புதுச்சேரியில் மாநில கட்சி அந்தஸ்து பெற்று இருந்தது. அந்த அந்தஸ்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதே போல் உபியில் அஜய்சிங் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தளம், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் செயல்படும் பிஆர்எஸ் கட்சியின் ஆந்திர மாநில கட்சி அந்தஸ்து, மணிப்பூரில் உள்ள மக்கள் ஜனநாயக கூட்டணி கட்சி, மேற்குவங்கத்தில் ஆர்எஸ்பி கட்சி, மிசோரமில் உள்ள மிசோரம் மக்கள் மாநாட்டு கட்சிகளின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது.
- கெஜ்ரிவால் மகிழ்ச்சி
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட டிவிட்: குறுகிய காலத்தில் தேசிய கட்சியா?. இது ஒன்றும் அதிசயம் அல்ல. நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் எங்களை இங்கு அழைத்துச் சென்றுள்ளனர். மக்கள் எங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். இன்று மக்கள் எமக்கு இந்த பெரிய பொறுப்பை வழங்கியுள்ளனர். இந்தப் பொறுப்பை நன்றாக நிறைவேற்ற எங்களை கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.